ஜாதகம் பார்த்து
ஆட்கள் அனுப்பி விசாரித்து
எல்லாம் பொருந்தி வர
சவரன் சீர்வரிசை
திருமணச் செலவு என
சம்பிரதாய பேச்சுக்களும்
சாதகமாக அமைந்து விட
கூரை புடவை
கூடைகூடையாய் பலகாரம்
பார்த்து பார்த்து
சேர்த்து வைத்த பாத்திரங்கள்
சொல்லி சொல்லி
தொடுத்து வாங்கிய நிறைமாலை - என்று
மாமன் சீர் கொண்டு வர
அடுக்கடுக்காய் நகை போட்டு
அக்கா அழகு செய்ய
தோழிகளின் தொல்லைகளால்
வெட்கம் அழுத்தி நான் தலைசாய
சிரிப்பொலியும் சப்தங்களும் நிறைந்த
மணமேடையில் கெட்டிமேள ஓசையில்
நான் கண்விழித்தேன்...
கொட்டியது மேளமல்ல...
தட்டியது கதவு...
அடுத்து ஒரு கோவலன் வந்தான்
தன் ஆண்மையை உறுதி செய்ய
இப்படியாய் கூறைப்புடவை கனவுகளோடு
வீட்டின் கூரையை புடவையாய்...
கழிந்த இரவுகளே அதிகம் என்பதால்
சாந்தி முகூர்த்தம் எனக்கு சலித்து போனது
ஆனால்...
எனக்கும் உண்டு
கல்யாண கனவு
என்னை தேடி
ஆண் பிள்ளைகள் அதிகம் வருகிறார்கள்
ஆனால் மாப்பிள்ளை யாரோ...
ReplyForward
|
No comments:
Post a Comment