அந்த சிகப்பு கலர் பெட்டி
பார்க்கும் போதெல்லாம் என்னை
கால் சட்டை வயதுக்கு
கடத்திப் போகும்

"ஸ்கூலுக்கு போறப்போ
போஸ்ட் பண்ணிட்டு போடா" என்று
அம்மா கொடுத்த
எத்தனையோ கடிதங்களை
எக்கியபடி போட்டிருக்கிறேன்
அந்த ஆலமரத்தின் தபால் பெட்டியில்...

பத்தடி நகர்ந்த பின்
சந்தேகம் வரும்...

உள்ளே விழுந்ததா, இல்லை...
தொண்டையில் சிக்கிய முள் போல
கம்பியில் சிக்கியபடி
பாதியில் தொங்குமா, என்று...

மீண்டும் வந்து...
சற்று உயரமான கல் நகர்த்தி போட்டு
உள்ளே கைவிட்டு
தொங்கும் கம்பிகளை ஆட்டிவிட்டு
கடிதம் உள்ளே விழும்,
'டொப்'  கேட்டபின் தான்
நகர்ந்து போவேன் நிம்மதியாய்...

No comments:

Post a Comment