கண்ணீரில் கரிக்கும் கடல்
சுனாமியே...!உயிர் குடிக்கும் எமனின்
பினாமியே...!
இத்தனை உயிர்களை
உருட்டிப் போட்டு
பகடை ஆடிய உன்னை...
அன்னை என்பதா...
அரக்கி என்பதா...?
நீ என்ன
அலைகடலா?
இல்லை...
கொலைகடலா?
ஊரே உன்னைத் தேடி வரும்
காற்று வாங்க...
நீ ஊர் தேடி வந்தாயே
காவு வாங்க...
நாங்கள் முன்னேற போட்ட
மனுக்கள் எல்லாம்
தண்ணீரின் எழுத்தாகி போனபோது,
நீ தண்ணீரால் எழுதி போனாயே
எங்கள் தலையெழுத்தை...!
பஞ்சத்தில் வாடிய
எங்கள் ஊர்களுக்கு
காவிரியை தானே வரச்சொன்னோம்
வந்ததே வீடுவரை வங்கக்கடல்...!
உன் பூகம்ப அலைகள்
புரட்டிப்போட்டதில்
அடித்தளமே மேல்தளமாய்
கவிழ்ந்து கிடக்கும் வீடுகள்...
உள்ளே மீட்கவும் முடியாமல்
இறந்து கிடக்கும்,
உயிர்களின் கூடுகள்...
கேவலம்
இத்தனை உயிர்களின்
இறப்பில்லா படைப்பது
இமாலய சாதனை...?
தண்ணீரே...!
உனக்கென்ன அப்படி
தாங்க முடியாத தாகம்...?
இப்படியா அள்ளிக் கொடுப்பது
இத்தனை உயிர்களை...?
எங்கள் வலைகளை கிழித்து போடவும்...
படகுகளை புரட்டிப் போடவும்...
எத்தனை மீன்களுடன் செய்துகொண்டாய்
ரகசிய ஒப்பந்தம்...?
நாங்கள் கடல் தாண்டி செல்ல
விசா வேண்டும்...
நீ எங்கு விசா வாங்கி
எங்கள் வீடுகளுக்கு வந்தாய்
உன் கரை தாண்டி...?
அழையா விருந்தாளியாய் நீ
அத்துமீறி நுழைந்ததில்...
தண்ணீரே துவைத்து பிழிந்து
காய போட சடலங்கள்
எங்கள் கரையோர கிராமங்களில்
கணக்கின்றி காணலாம்
சாவு கணக்கை
சேகரிக்க வந்தவர்களே...!
பிணங்களை எண்ணிவிடலாம்
நடைபிணங்களை
எந்த கணக்கில் எழுதி வைப்பீர்கள்...?
உயிர்களைவிட
உடல்களே இங்கு
அதிகம் இருப்பதால்...
மிச்சம் இருப்பவர்களை எண்ணுங்கள்...
சீக்கிரம் முடிந்து விடும்
உங்கள் வேலை...!
தயாரித்த அறிக்கையின்
தலைப்பில் எழுதுங்கள்
"இது கண்ணீரில் கரிக்கும் கடல்" என்று